உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பருவமழை முன்னெச்சரிக்கை தீயணைப்பு துறையினர் ஒத்திகை

பருவமழை முன்னெச்சரிக்கை தீயணைப்பு துறையினர் ஒத்திகை

திருத்தணி:வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, திருத்தணி வருவாய்த் துறையினர் ஏற்பாட்டில், தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேல்திருத்தணி பகுதியில் உள்ள நல்லாங்குளத்தில் நேற்று பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர். இதில், தீயணைப்பு வீரர்கள் ஏரி, ஆறு, குளம், கிணறு மற்றும் அணைகளில் பருவமழையின்போது நீர் நிரம்பி வரும் சூழலில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். மேலும், தண்ணீரில் விழுந்தவர்களை காப்பாற்றவும், நீரில் அடித்து செல்வோரை காப்பாற்றுவது குறித்தும், ஒத்திகை பயிற்சி செய்து, பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து, பகுதிமக்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. இதனால், பகுதிமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். திருத்தணியில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்காமல், வருவாய்த் துறை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ