குடிநீர் பணிக்காக சாலை சேதம் சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அச்சம்
திருத்தணி: திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வழியாக, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திண்டிவனம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.இச்சாலையை கடந்தாண்டு சாலை விரிவாக்கம் செய்தனர். அதாவது, அரக்கோணம் நகரில் இருந்து, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை வரை சாலை விரிவாக்கம் செய்து சாலையோரம் தடுப்பு கம்பிகள் அமைத்தும், நவீன கழிப்பிடத்துடன் கூடிய பயணியர் நிழற்குடைகள் அமைத்துள்ளன.இந்த நிலையில் வள்ளியம்மாபுரம் அரசினர் தொடக்கப் பள்ளி, பேருந்து நிறுத்தம் அருகே, மாநில நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்காக சாலை சேதப்படுத்தி குழாய்கள் ஊராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலை துறை அனுமதியுடன் புதைத்தது.அதன்பின் சாலையை சீரமைக்காமல்வெறும் ஜல்லிகற்கள் கொட்டி தற்காலிகமாக வாகனங்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டன. ஒன்றரை மாதத்திற்கு மேலாகியும் சாலை சீரமைத்து தார்ச்சாலை அமைக்காததால், தினமும் குறைந்தபட்சம் 10 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி படுகாயங்களுடன் சென்று வருகின்றனர்.இதுதவிர, மக்கள் சாலை கடக்கும் போதும், தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள்கோரிக்கை வைத்துள்ளனர்.