சாலையில் இரும்பு தடுப்புகள் சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
சோழவரம்:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை, இணைப்பு சாலையில் பயணிக்கும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நுழைவதை தடுக்கவும், கால்நடைகள் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்கவும் அமைக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், சோழவரம் அடுத்த ஆத்துார், தேவனேரி, செம்புலிவரம் ஆகிய பகுதிகளில், சாலையோர இரும்பு தடுப்புகள் ஆங்காங்கே சேதம் அடைந்து கிடக்கின்றன. சேதமானவை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது.மேலும், சேதம் அடைந்து தடுப்புகள் இல்லாத பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் கால்நடைகள் குறுக்கும் நெடுக்குமாக உலா வருகின்றன. பாதசாரிகளும் திடீரென சாலையை கடக்கின்றனர். சேதம் அடைந்து கிடக்கும் இரும்பு தடுப்புகளை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.