| ADDED : நவ 16, 2025 02:20 AM
ஆர்.கே.பேட்டை: கொண்டாபுரம் குவாரியில் இருந்து, திருத்தணி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நுழையும்டிப்பர் லாரிகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் பகுதியில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், சோளிங்கர் பகுதிகளில் இருந்து ஏராளமான டிப்பர் லாரிகள் தினசரி வந்து செல்கின்றன. இந்த குவாரியில் இருந்து புச்சிநாயுடுகண்டிகை கூட்டுச்சாலை வழியாக வரும் லாரிகள், திருத்தணி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நுழைகின்றன. இப்பகுதியில் சாலை மைய தடுப்புகள் இல்லாததால், அதிவேகமாக திரும்பும் லாரிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. புச்சிநாயுடு கண்டிகை சாலையில் இருந்து வரும் லாரிகளால், மாநில நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும்முன், கூட்டுச்சாலையில் மைய தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.