உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி பாலத்தில் விரிசலால் வாகன ஓட்டிகள் அச்சம்

தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி பாலத்தில் விரிசலால் வாகன ஓட்டிகள் அச்சம்

திருவள்ளூர்: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் மேம்பாலத்துடன், சாலை இணையாமல் விரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை பாடியில் இருந்து - ரேணிகுண்டா வரை, 124 கி.மீ.,க்கு ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி, கடந்த 2011ம் ஆண்டு துவங்கியது. பாடியில் இருந்து திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரையும், நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து திருநின்றவூர் தனியார் ஸ்டீல் கம்பெனி வரை சாலை இணைக்கும் பணி முடங்கி, கடந்த 2022ம் ஆண்டு மீண்டும் துவங்கியது. திருவள்ளூர் - திருநின்றவூர் வரை, 17.5 கி.மீ.,க்கு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில், ஐ.சி.எம்.ஆர்., தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம், திருநின்றவூர் வரை, ஏழு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவருடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை இணையாமல், விரிசல் அடைந்துள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலையின் உறுதிதன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், அணுகுசாலை இல்லாததால், தலக்காஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அவசரகதியில் பாலம் திறப்பதை விட்டு விட்டு, தரமாக சாலை அமைத்து, முறையாக அணுகுசாலை அமைக்க வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரச்சான்று பெற்ற பின்னரே, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை