நெடுஞ்சாலை மீடியனில் மாடுகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சோழவரம்:சோழவரம் அடுத்த, தேவனேரி, செம்புலிவரம், ஆத்துார் ஆகிய பகுதிகளில் சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை மீடியன்களில் மாடுகள் படுத்துறங்குகின்றன.இவை அருகில் உள்ள கிராமங்களில் இருந்து, மீடியன் பகுதியில் மேய்ச்சல் தேடி வருகின்றன. அதே பகுதியில் செடிகளின் நிழல்களில் படுக்கின்றன.அவ்வப்போது சாலையின் குறுக்கே பயணிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையில், மாடுகள் குறுக்கும், நெடுக்கிலும் சுற்றி வருவதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.மீடியனில் படுத்துறங்கும் மாடுகள் திடீரென சாலைக்கு வரும்போது, அதேசமயம் பயணிக்கும் வாகன ஓட்டிகள், இவற்றின் செயலால் நிலை தடுமாறுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது.சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அதை யாரும் பின்பற்றுவதில்லை.மற்ற சாலைகளைவிட, தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் அதிவேகமாகவே பயணிப்பதால், விபத்து நேரிட்டால் பெரிய அளவிலான அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உருவாகும்.துரித நடவடிக்கையாக, மீடியன் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிபார்க்கின்றனர்.