சுரங்க பாலத்தில் சகதி வாகன ஓட்டிகள் அவதி
பள்ளிப்பட்டு:ஆறு வழிச்சாலை சுரங்க பாலம் சகதியானதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், தச்சூரிலிருந்து ஆந்திர மாநிலம் சித்துாருக்கு ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிப்பட்டு அடுத்த தொட்டிபாளையம் அருகே உள்ளூர் சாலை போக்குவரத்துக்காக சுரங்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு வழிச்சாலையில் இருந்து சரியும் மண், மழை நீரால் சேறாக சுரங்க பாலத்தில் குவிந்து கிடக்கிறது. இதனால், இந்த சுரங்க பாலத்தை கடந்து செல்லும் உள்ளூர் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இந்த வழியாக தொட்டிபாளையம் மற்றும் பெருமாநல்லுார் காலனியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சொரக்காய்பேட்டைக்கு நடந்து சென்று வருகின்றனர். மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி சுரங்க பாலத்தில் உள்ள சகதியை அகற்றி சீரமைக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.