சாலையில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் வியாபாரிகள் அலட்சியம்: மக்கள் அவதி
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகள், பிளாஸ்டிக் குப்பைகளை சாலையில் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சென்னையில் இருந்து ஆந்திராவின், திருப்பதி, கடப்பா, நந்தியால், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், பஜார் வழியே செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. உணவகங்கள், குளிர்பானம், மளிகை, துணி, பழக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சாலையில் வீசுகின்றனர். காற்று வீசும் போது பிளாஸ்டிக் கழிவுகள் பறந்து, சாலை முழுதும் பரவி கிடக்கிறது. சில நேரங்களில் பிளாஸ்டிக் கவர்கள், காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. பாதசாரிகளும் இதன் மீது நடக்கும் போது வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையில் குப்பை கழிவுகளை கொட்டும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.