உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் 8 அரசு பள்ளிகளில் ரூ.12 கோடியில் புதிய வகுப்பறை

திருத்தணியில் 8 அரசு பள்ளிகளில் ரூ.12 கோடியில் புதிய வகுப்பறை

திருத்தணி:திருத்தணி கோட்டத்தில் எட்டு அரசு பள்ளிகளில், 12.14 கோடி ரூபாயில், 36 புதிய வகுப்பறை, குடிநீர், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை, பொதுப் பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். திருத்தணி வருவாய் கோட்டத்தில், 33 அரசு உயர்நிலைப் பள்ளி, 24 அரசு மேல்நிலைப் பள்ளி என, மொத்தம் 57 பள்ளிகள் உள்ளன. மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள், கழிப்பறை, சுற்றுச்சுவர், குடிநீர், நுாலகம் போன்ற வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். முதற்கட்டமாக, எட்டு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை, ஆண், பெண் தனித்தனி கழிப்பறை, குடிநீர், சுற்றுச்சுவர் மற்றும் நுாலகம் அமைக்க, நபார்டு வங்கி திட்டம், 2025 - 26ம் ஆண்டின் கீழ், 12.14 கோடி ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. இதன் மூலம், 36 புதிய வகுப்பறைகள், ஒரு நுாலகம், 11 கழிப்பறைகள், இரு குடிநீர் தொட்டிகள் மற்றும் ஐந்து பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் போன்ற பணிகளுக்கு, பொதுப் பணித்துறை 'டெண்டர்' விடப்பட்டு, ஏழு மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருத்தணி பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் முரளி கூறியதாவது: பொதட்டூர்பேட்டை, கே.ஜி.கண்டிகை, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், ஆற்காடு ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், சுற்றுச்சுவர், கழிப்பறை அமைக்கப் பட உள்ளன-. மேலும், தும்பிகுளம், சானுார்மல்லாவரம், கொண்டாபுரம் ஆகிய மூன்று அரசு உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள், ஏழு மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !