உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி நுழைவாயிலில் கதவு இல்லை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

பள்ளி நுழைவாயிலில் கதவு இல்லை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

மீஞ்சூர், அரசு பள்ளி வளாகத்தின் நுழைவாயிலில் கதவு இல்லாததால், கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில், 40 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் இரண்டு கட்டடங்களில் நான்கு வகுப்பறைகள் உள்ளன. கட்டடங்களை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட நிலையில், நுழைவாயிலில் இரும்பு கதவு பொருத்தப்படாமல் உள்ளது. திறந்த நிலையில் உள்ள நுழைவாயில் வழியாக கால்நடைகள், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, அங்கேயே ஓய்வெடுத்து வருகின்றன. மேலும், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர், பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி வருவதுடன், பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, உடனே பள்ளி வளாகத்தின் நுழைவாயிலில் இரும்பு கதவு பொருத்த, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !