திருத்தணி: சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதோருக்கு, ஊழியர்கள் வீடு வீடாக சென்று 'நோட்டீஸ்' வினியோகம் செய்து வருகின்றனர். திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 13,500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளுக்கு ஆண்டுக்கு இரு முறை நகராட்சி நிர்வாகம் சொத்து வரி, குடிநீர் கட்டணம் நிர்ணயம் செய்து, வீட்டு உரிமையாளர்கள் கட்ட வேண்டும் என, விழிப்புணர்வு செய்தும் வருகின்றனர். மேலும், மொபைல் போன் மூலம் குறுந்தகவல் அனுப்புகின்றனர். சொத்து வரி, குடிநீர் கட்டணம், குத்தகை, தொழில் வரி உள்ளிட்டவற்றால், ஆண்டுக்கு 6.50 கோடி ரூபாய் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால், சில வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் வரி செலுத்தாமல் உள்ளனர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சொத்து வரி செலுத்தாத வீட்டு உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, 'ஜப்தி' மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என, அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது, நகராட்சி ஊழியர்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு சென்று, வரி செலுத்துமாறு 'நோட்டீஸ்' வழங்கி வருகின்றனர்.