உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரணி ஆற்றில் நன்னீர் விட குழாய் அமைக்கும் பணிக்கு... எதிர்ப்பு: பொன்னேரி பாதாள சாக்கடை திட்ட பணிக்கு சிக்கல்

ஆரணி ஆற்றில் நன்னீர் விட குழாய் அமைக்கும் பணிக்கு... எதிர்ப்பு: பொன்னேரி பாதாள சாக்கடை திட்ட பணிக்கு சிக்கல்

பொன்னேரி:கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக ஆரணி ஆற்றில் விடும் திட்டத்திற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பொன்னேரியில், 62.82 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில், முதல்கட்டமாக 22 வார்டுகளில், 62.82 கோடி ரூபாயில், 41.45 கி.மீ., தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள், கடந்த 2018ல் துவக்கப்பட்டன.தெருக்களில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், மேன்ஹோல்கள் பொருத்துவது, குடியிருப்புகளின் கழிவுநீரை சேகரிக்க வேண்பாக்கம், பழைய பேருந்து நிலையம், கள்ளுக்கடைமேடு, செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில் கீழ்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டன.அங்கு ஜெனரேட்டர், பம்பிங் மோட்டார் உள்ளிட்டவைகளும் பொருத்தப்பட்டன. குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்து, ஆரணி ஆற்றில் விட திட்டமிடப்பட்டு உள்ளது.

கட்டமைப்பு

இதற்காக, பொன்னேரி, பெரியகாவணம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றின் அருகே, 1.5 ஏக்கர் பரப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டு உள்ளது.இங்கு தினமும், 60 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக நான்கு புளோயர்கள், 16 மோட்டார்கள், குழாய் இணைப்புகள், 200 கி.வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர், கசடுகளை பிரிப்பதற்கான பில்டர்கள் என, பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. பல்வேறு நிலைகளில் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பின், இறுதியாக வெளியேறும் நன்னீரை ஆரணி ஆற்றில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, 3.8 கி.மீ., தொலைவிற்கு குழாய் பதித்து, லட்சுமிபுரம் அணைக்கட்டிற்கு அருகே, ஆற்றில் விடுவதற்கான பணிகள், நான்கு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டன.சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை ஆற்றில் விடுவதற்கு, கரையோர கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை ஆற்றில் விடுவதால், ஆற்று நீர் மாசடையும் எனவும், அங்குள்ள ஆழ்துளை மோட்டார்கள் பாதிப்படையும் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.கிராமவாசிகளின் எதிர்ப்பால் குழாய் பதிப்பு பணிகள் நிறுத்தப்பட்டதுடன், அத்திட்டம் முடங்கி உள்ளது. இதனால், பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கிராமவாசிகளின் அச்சத்தை போக்கி, பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பாதிப்பு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மாவட்ட அதிகாரி கூறியதாவது:நுாறு சதவீதம் பல்வேறு நிலைகளில் முழுமையாக கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பின்பே ஆற்றில் விடப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு நீர்நிலைகளில் தான் விடப்படுகிறது.மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே இது நடைமுறைப்படுத்தப்படும். தினமும் கண்காணித்து, இணையதளத்தில் பதிவேற்றப்படும்.நீர்வளத்துறையினர் முழுமையான ஆய்வுக்கு பின்பே, ஆற்றில் விடுவதற்கான அனுமதி பெறப்பட்டு உள்ளது. ஆரணி ஆற்றின் கரையோரங்களில் தான், கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளோம்.பாதிப்பு இருப்பின், நாங்கள் செயல்படுத்துவோமா? மேலும், ஆற்றில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விடுவது ஒரு தற்காலிக தீர்வு தான்.கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் அனல்மின் நிலைய நிறுவனம், சுத்திகரிப்பு ஆலையில் இருந்து தினமும் வெளியேறும், 60 லட்சம் லிட்டர் தண்ணீர் முழுதையும் வாங்கி கொள்வதாக, நகராட்சி நிர்வாகத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.அதற்கான குழாய் பதிப்பது மற்றும் பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தவதற்கு, 6 - 9 மாதங்கள் ஆகும். அதுவரை தற்காலிக தீர்வாக தான், ஆரணி ஆற்றில் விட திட்டமிட்டுள்ளோம். அதுவும், 100 சதவீதம் பாதுகாப்பான வழிமுறையாகவே இருக்கும்.கிராமவாசிகளிடம் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். விரைவில், இதற்கு தீர்வு கிடைத்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை