பெண்ணிடம் பணம் பறித்த டூ- பாக்கூர் போலீஸ் கைது
திருவள்ளூர்:திருவள்ளூர் பெரிய குப்பம் குமரன் நகரை சேர்ந்தவர் ஜெயந்தி, 44. இவர் திருவள்ளூர் ஆயில் மில் அம்பேத்கர் சிலை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.கடந்த 16ம் தேதி ஜெயந்தி கடையில் இருந்த போது கடைக்கு வந்த நபர் ஒருவர் தன்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் என, கூறி அறிமுகம் செய்து கொண்டார். பின் பெட்டிக்கடையில் ஹான்ஸ் போன்ற குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதனால் விசாரிக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.தனக்கு 1 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் ஜெயிலுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.இதனால் பதறிப்போன ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த நகையை அடமானம் வைத்து 51 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட நபர் அங்கிருந்து உடனடியாக சென்றார். சந்தேகம் அடைந்த ஜெயந்தி கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் பணம் பறித்தது திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் காலனி கண்ணன் தெருவை சேர்ந்த பாபு மகன் கண்ணதாசன், 36 என, தெரிந்தது. இதையடுத்து போலீசார் கண்ணதாசனை கைது செய்து அவரிடமிருந்து 44 ஆயிரம் ரூபாயை மீட்டனர்.-----------------