சின்னம்மாபேட்டை - திருவாலங்காடுக்கு பேருந்து இயக்க பெற்றோர் எதிர்பார்ப்பு
திருவாலங்காடு:திருவாலங்காடு அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் நலன் கருதி, சின்னம்மாபேட்டையில் இருந்து திருவாலங்காடுக்கு, அரசு பேருந்து இயக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். திருவாலங்காடில் அரசு மேல்நிலைப் பள்ளி, 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், களக்காட்டூர், வீரராகவபுரம், அரிசந்திராபுரம், சக்கரமநல்லுார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களில் இருந்து, பள்ளிக்கு செல்ல, 4 - 10 கி.மீ., தொலைவுக்கு, மாணவ- மாணவியர் நடந்தும், சைக்கிள் மூலமும் சென்று வருகின்றனர். சிலர், கிராமம் வழியாக செல்லும் ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்களில் 'லிப்ட்' கேட்டும் சென்று வருகின்றனர். இதனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நீண்ட துாரம் நடந்து செல்வதால், பள்ளி செல்வதற்குள் உடல் அசதியால் மாணவ - மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சின்னம்மாபேட்டை --- திருவாலங்காடு வழித்தடத்தில் பேருந்து சேவை இல்லாததால், ஒரு சில மாணவியர் பள்ளிக்கு செல்வதையும் தவிர்த்து வருகின்றனர். மாலை நேரங்களில் வீடு திரும்புவதற்கு வெகு நேரமாவதால்,அச்சம் காரணமாக,மாணவியரை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர். எனவே, சின்னம்மாபேட்டை - திருவாலங்காடு வழித்தடத்தில் பேருந்து இயக்கி, மாணவ - மாணவியரின் கல்வி எதிர்காலத்தை காக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.