போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய இடத்தில் பார்க்கிங் வசதி
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் எளிதாக நடந்து செல்வதற்கும், மலையடிவாரத்தில் வாகனங்களை நிறுத்த கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 103 கோடி ரூபாயில், 'மாஸ்டர் பிளான்' திட்டத்தை சட்டசபையில் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் முருகன் மலைக்கோவிலில், மூன்று அடுக்கு அன்னதான கூடம், பூஜை பொருட்கள் விற்பனை நிலையம், நுழைவுவாயில், வாகன நிறுத்துமிடம், ராஜகோபுரம் - தேர்வீதி இணைக்கும் படிகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு, 86.76 கோடி ரூபாயில், 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வளர்ச்சி பணிகள் நடந்து வருவதால், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், நேற்று முருகன் கோவில் அறங்காவல் குழுத்தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மலைப்பாதை நுழைவு பகுதி அருகே உள்ள முக்கண் விநாயகர் கோவில் பின்புறம் மற்றும் கார்த்திகேயன் குடில்களில் உள்ள காலி இடங்களை ஆய்வு செய்தனர். இரு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு, கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ஒரு வாரத்தில் அனைத்து பணிகளையும் முடித்து, புதிய வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டிற்கு வரும் என, அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.