முடங்கிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் புத்துயிர் அளிக்க பயணியர் எதிர்பார்ப்பு
பொன்னேரி, பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தில், இயந்திரங்கள் பழுதாகி மூடியதால்,குடிநீர் கிடைக்காமல் பயணியர் தவித்து வருகின்றனர்.பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம், பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு என, 75க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் பயணிக்கின்றனர்.பயணியரின் வசதிக்காக, பொன்னேரி நகராட்சி நிர்வாகம் சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த மையம் முறையான பராமரிப்பு இன்றி கிடக்கிறது. தற்போது, சுத்திகரிப்பு மையத்தில் இயந்திரங்கள், உபகரணங்கள் பழுதாகி சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால், குடிநீர் கிடைக்காமல் பயணியர் தவித்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள், அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாமல் முடங்கி கிடப்பதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைத்து, பயணியரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.