17 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டியால் மக்கள் ஏமாற்றம்
திருவாலங்காடு:மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து, 17 மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராததால், சின்னம்மாபேட்டை மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சி குமரன் நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக குமரன் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. கடந்த 2023 டிசம்பரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், 17.25 லட்சம் ரூபாயில், 30,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கடந்த 2024 மார்ச் மாதம், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் திறந்து வைத்தார். தற்போது, 17 மாதங்களான நிலையில், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. இதனால், குமரன் நகர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குடிநீர் தொட்டியை சுற்றி செடி மற்றும் புற்கள் வளர்ந்து பாழாகி வருகிறது. எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.