சின்னம்மாபேட்டையில் கழிவுநீர் தேக்கம் நோய் தொற்று அபாயத்தில் மக்கள்
திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில், ஸ்டேஷன் ரோடு, அரிசந்திராபுரம் சாலை, தக்கோலம் சாலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும், 150க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், மண்டபங்கள் உள்ளன.இங்கு சேகரமாகும் கழிவுநீர் செல்ல, திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையையொட்டி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கால்வாய் சேதமடைந்து உள்ளதாலும், ஆங்காங்கே பாதையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாலும், பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.மேலும், கழிவுநீரில் இருந்து உருவாகும் கொசு, பூச்சிகள் அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளை கடிப்பதால், குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர்.இந்த பகுதியில், சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை அமைக்கப்படுகிறது. அப்போது, வெளியூர்களில் இருந்து வியாபாரிகள், மக்கள் என, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எனவே, இவர்களும் நோய் பாதிப்பில் சிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்கவும், கால்வாயை சீரமைக்கவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.