பொன்னேரியில் 7.2 செ.மீ., மழை தொடர் மழையால் மக்கள் தவிப்பு
திருவள்ளூர்: 'மோந்தா' புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில், 7.2 செ.மீ., மழை பதிவாகியது. வங்க கடலில் உருவான 'மோந்தா' புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் நகரில், நேற்று காலை முதல் இடைவிடாது பெய்து வரும் கன மழையால், மக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்திலும், வீரராகவர் கோவிலிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் குளம் அமைக்கும் இடத்தில் இருந்த வேப்ப மரம் சாய்ந்தது. நகரின் பிரதான சாலைகளிலும், மழைநீர் தேங்கி குளமாக மாறியது. அதிகபட்சமாக, பொன்னேரியில் 7.2 செ.மீ., மழை பதிவாகியது. மழையளவு விபரம் இடம் மழை(செ.மீ.,) பொன்னேரி 7.2 ஆவடி 6.7 ஊத்துக்கோட்டை 6.1 சோழவரம் 5.3 செங்குன்றம் 5.2 தாமரைப்பாக்கம் 4.5 கும்மிடிப்பூண்டி 3.4 பூண்டி 3.1 திருவள்ளூர் 3.0 பூந்தமல்லி 3.0