ரயில் தண்டவாளம் இடையே பயணியர் கடப்பதை தடுக்க தடுப்பு அமைக்க மனு
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது தண்டாவளங்களுக்கு இடையே, ஆபத்தான முறையில் பயணியர் கடப்பதை தவிர்க்க, நீண்ட தடுப்பு அமைக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், சென்னை கோட்ட ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில், 11 நீண்ட துார விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. அவற்றில், சென்னை - திருப்பதி கருடாத்ரி மற்றும் சென்னை - ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில்களில், அதிகளவு பயணியர் பயணம் செய்கின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தில், விரைவு ரயில்கள் நிறுத்தும் நேரம், இரண்டு நிமிடம் என்றாலும், அதுவரை ரயில்கள் நிற்பதில்லை. அந்த ரயில்களில், 400க்கும் மேற்பட்ட பயணியர் பயணிக்கின்றனர். அதிக கூட்டம் காரணமாக, ரயிலில் இருந்து பயணியர் இறங்கியதும், நடைமேடையில் இருப்போர், ரயிலுக்குள் ஏறுவதற்குள், ரயில் புறப்பட்டு விடுகிறது. விரைவு ரயில்கள் பெரும்பாலும், ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடையில் நிற்பதால், ரயில் புறப்படுவதற்குள், அவற்றில் பயணிப்பதற்காக பயணியர் சிலர் ஆபத்தான முறையில், நடைமேடையில் இருந்து கீழே குதித்து, ரயில்களில் ஏற முயற்சிக்கின்றனர். கடந்த ஜூலை 4ம் தேதி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்ற அசம்பாவிதத்தை தவிர்க்க, ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடைகளுக்கு இடையில் உள்ள ரயில் தண்டவாளங்களின் நடுவில், நீண்ட துார தடுப்பு அமைத்தால், பயணியர் தண்டவாளத்தை கடக்கும் சம்பவம் தடுக்கப்படும். எனவே, ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து, தண்டவாளங்கள் இடையில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.