அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் கலையரங்கம் அமைக்க மனு
திருத்தணி:அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூகவிரோத செயல்கள் நடப்பதை தடுப்பதற்காக, சுற்றுச்சுவர் மற்றும் கலையரங்கம் அமைக்க வேண்டும் என, எம்.எல்.ஏ.,விடம் மனு அளிக்கப்பட்டது.திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு காலனியில், 13.50 லட்சம் ரூபாயில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுவதற்கு, நேற்று அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார். அப்போது, பூனிமாங்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன், உதவி தலைமை ஆசிரியர் மகாலிங்கம் ஆகியோர், எம்.எல்.ஏ., சந்திரனிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:பள்ளியின் சுற்றுசுவர் உயரம் மிகவும் குறைவாக உள்ளதால், இரவு நேரம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் மர்மநபர்கள் சிலர், சுவர் ஏறி குதித்து பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதை தடுப்பதற்கு சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட வேண்டும். கலையரங்கத்திற்கு கூரை இல்லாமல் உள்ளதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, கலையரங்கத்திற்கு கூரை அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, 'தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்து தருகிறேன்' என, எம்.எல்.ஏ., கூறினார்.அதேபோல், பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 78 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.