உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு மல்லியங்குப்பத்தில் மறியல் போராட்டம்

ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு மல்லியங்குப்பத்தில் மறியல் போராட்டம்

ஆரணி:சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லியங்குப்பம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். காய்கறி, பூ, கீரை வகைகள் பயிரிட்டு தொழில் செய்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், தமிழகம் முழுதும் பல்வேறு ஊராட்சிகளை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதில், மேற்கண்ட மல்லிங்குப்பம் ஊராட்சியை, அருகில் உள்ள ஆரணி பேரூராட்சியுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதற்கு, மல்லிங்குப்பம் கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்டோர், புதுவாயல் - பெரியபாளையம் சாலையில் உள்ள ஆரணியில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதித்தது.போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, கிராமத்தினர் மறியலை கைவிட்டு சாலையின் ஓரத்தில் அமர்ந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் கூறியதாவது:தங்களது ஊராட்சியை, ஆரணி பேரூராட்சியுடன் இணைப்பதால், நுாறுநாள் வேலை திட்டம் பறிபோகும். இதை நம்பி உள்ள, 400க்கும் மேற்பட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.நகர்ப்புற பகுதியாக மாறும்போது, சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாவர்கள். கிராமசபை ஒப்புதல் இல்லாமல், எப்படி இணைக்கலாம். அரசு இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிடவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தகவல் அறிந்து அங்கு வந்த சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக, திருவள்ளூர் கலெக்டர், திட்ட இயக்குனர் ஆகியோரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினர். அதையடுத்து, கிராமவாசிகள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை