குவியுது குப்பை; அடிக்குது துர்நாற்றம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆபத்து
திருவாலங்காடு:அங்கன்வாடி மையம் அருகே குப்பை கொட்டி, அதை எரிப்பதால் குழந்தைகளுக்கு நோய் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பெற்றோர் புலம்புகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சி, பாஞ்சாலி நகரில் திரவுபதி அம்மன் கோவில் அருகே, அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு, 2 - 5 வயதுள்ள 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையத்தில் இருந்து, 10 மீட்டர் துாரத்தில் உள்ள சாலையில் இறைச்சி கழிவுகள், வீட்டில் சேகரமாகும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பை கழிவுகளை உண்பதற்காக, அப்பகுதியில் பன்றிகள் சுற்றித்திரிக்கின்றன. மேலும், மழைக்காலத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி குழந்தைகளை கடித்தால், காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக பெற்றோர் புலம்புகின்றனர். எனவே, அங்கன்வாடி குழந்தைகளின் நலன் கருதி, இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். தேங்கியுள்ள குப்பையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.