பிளாஸ்டிக் கழிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு: பழவேற்காடில் மக்களிடம் விழிப்புணர்வு
பழவேற்காடு:தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் துாய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், பழவேற்காடில் தன்னார்வலர்கள், துாய்மை காவலர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியுடன் துாய்மை பணிகள் நேற்று நடந்தன.பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பேரணியை துவக்கி வைத்து, துாய்மை பணிகளிலும் ஈடுபட்டார். பழவேற்காடு பஜார் பகுதியில் துவங்கிய பேரணி, லைட்அவுஸ் குப்பம் கடற்கரையில் முடிந்தது. பின், கடற்கரை பகுதியில் இருந்து, பிளாஸ்டிக் கழிவை சேகரித்து துாய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றன.கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியர் மற்றும் பொதுமக்கள் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவால், சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும், சப் - கலெக்டர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், இந்த ஆண்டு முழுதும், ஒவ்வொரு மாதமும், நான்காவது சனிக்கிழமைகளில், பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் துாய்மை பணிகள், வெவ்வேறு இலக்குகளுடன் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.பழவேற்காடு வனசரக அலுவலர் ரூபஸ் வெஸ்லி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், குணசேகரன், திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் மற்றும் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கடற்கரை துாய்மை பணிகளில் ஈடுபட்டனர்.தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் துாய்மைபடுத்தும் திட்டத்தின் நோக்கம், பிளாஸ்டிக் கழிவை சேகரித்தல், பொது இடங்களை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் மாசு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் எனவும், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இது மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.