பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, 'டோக்கன்' வழங்கும் பணி துவங்கியது.தமிழக அரசு இந்த ஆண்டு, பொங்கல் பரிசு தொகுப்பாக, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என, அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 1,108 ரேஷன் கடைகளில் 6 லட்சத்து 35 ஆயிரத்து 516 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று துவங்கியது.ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று டோக்கன்களை வினியோகம் செய்து வருகின்றனர். இந்த 'டோக்கன்' பெற்றவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.திருவள்ளூர் ஜே.என்.சாலையில் அமைந்துள்ள ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று பத்தியால்பேட்டை, சேலை ரோடு, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதியில் வீடு, வீடாகச் சென்று டோக்கன் வழங்கினர். மற்ற பகுதிகளிலும், அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள், டோக்கன் வழங்கி வருகின்றனர்.