உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோளூர் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

கோளூர் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பொன்னேரி:மெதுார் - கோளூர் சாலையில், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் இருந்து வேம்பேடு, ஆவூர் வழியாக, கோளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்குகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர், பள்ளங்களில் சிக்கி சிறு சிறு விபத்துகளுக்குள்ளாகி தவிக்கின்றனர். ஒரு சிலர் பள்ளங்களை தவிர்க்க மாற்றுதிசையில் செல்லும் போது, எதிரே வரும் வாகனங்கள் நிலைதடுமாறுகின்றன. இதனால், அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: இச்சாலையில் ஆவூர், கோளூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் செல்வதற்கான சிறுபாலங்கள் உள்ளன. பாலங்களின் இணைப்பு சாலைகள் சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இதுகுறித்து நம் நாளிதழில் அவ்வப்போது செய்திகள் வெளியாகின. நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளமால், கடமைக்கு ஜல்லிக் கற்களை கொட்டி பள்ளங்களை மூடுகின்றனர். தொடர் வாகன போக்குவரத்தில், சில நாட்களிலேயே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து பழைய நிலையே தொடர்கிறது.எனவே, சாலை பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் நிரந்தர தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ