சிறையில் கஞ்சா பறிமுதல் காவலரை தாக்கிய கைதி
புழல்:புரசைவாக்கம் எழில் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற 'முயல் காது' அப்பு, 21. அடிதடி வழக்கில், தலைமைச் செயலக குடியிருப்பு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீசார் அவரை சோதனை செய்ததில், ஆசனவாயிலில் 2 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதேபோல், புழல் தண்டனை சிறையில், சோதனை மேற்கொண்டபோது, ராயப்பேட்டையை சேர்ந்த அஷ்ரப் ஷெரிப், 31 என்ற கைதியின் உடையில், 3 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இவர், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், 10 ஆண்டு தண்டனை பெற்று கைதியாக உள்ளார். மேலும், விசாரணை சிறையில், சிறை காவலர் பிரபாகரன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த சதீஷ், 30, என்ற கைதி, காவலரை தாக்கியுள்ளார். இதுகுறித்து, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.