பட்டரைபெரும்புதுார் ஏரியில் மண் கொள்ளையை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
திருவள்ளூர்:பட்டரைபெரும்புதுார் ஏரியில் நடைபெறும் மண் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி, பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் ஏரியில், சவுடு மண் குவாரி செயல்பட, கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அங்குள்ள சர்வே எண் - 312/1ல், 3 அடி ஆழத்தில் சமதளமாக மண் எடுக்க அரசு அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, 45 நாட்களுக்கு 2,000 லோடு மண் மட்டும் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சவுடு மண் குவாரி எடுத்த ஒப்பந்ததாரர்கள், நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்ட லோடு மண் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து, அப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். இதையடுத்து, பட்டரைபெரும்புதுார் ஏரியில் எவ்வளவு மண் எடுக்கப்பட்டு உள்ளது. விதிமீறல் உள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க, மாவட்ட கனிமவள துணை இயக்குனர், நீர்வளத்துறையினருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, மனு அளித்த சமூக ஆர்வலர்களில் ஒருவரான வசந்தகுமார் மற்றும் பகுதி மக்கள் சிலர் நேற்று, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கனிமவள துறை அலுவலகம் முன், கருப்பு சட்டை அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம், கனிமவள துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.