நீர்வரத்து கால்வாயில் பாதை தண்டலத்தில் மக்கள் எதிர்ப்பு
செவ்வாப்பேட்டை,செவ்வாப்பேட்டை அருகே, தனியார் நிலத்திற்காக நீர்வரத்து கால்வாயில் குழாய் அமைத்து, பாதை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ள தண்டலம் வீரராகவபுரம் பகுதியில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிலத்திற்கு பாதை இல்லை. அதனால், நிலத்தின் முன்புறம் உள்ள ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் குழாய் அமைத்து, பாதை அமைக்கும் பணி நேற்று நடந்தது. தகவலறிந்த தண்டலம் பகுதி மக்கள், அப்பகுதிக்கு வந்து நீர்வரத்து கால்வாயில் பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இவ்வாறு குழாய் அமைத்தால், ஏரிக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதியில் நீர் தேங்கும் என கூறி வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்த நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் உஷா, செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் அன்புசெல்வி மற்றும் போலீசார் பகுதி மக்களிடம் பேச்சு நடத்தினர். பின், நீர் வரத்து கால்வாய் குழாய் அமைக்கக் கூடாது. உங்கள் நிலத்திற்கு செல்ல பாதை வேண்டுமானால், நீர் வரத்து கால்வாயில் சிறுபாலம் அமைத்து, பாதை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என, உதவி பொறியாளர் ஆஷா அறிவுறுத்தினார். இதையடுத்து, நீர்வரத்து கால்வாயில் குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. பின், சமாதானமடைந்த அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.