ஆமை வேகத்தில் புதுப்பாளையம் மேம்பால பணி தற்காலிக பாலமும் சேதமடைந்ததால் மக்கள் அவதி
ஊத்துக்கோட்டை: புதுப்பாளையம் மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்காலிக பாலமும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். ஆந்திராவில் உருவாகும் ஆரணி ஆறு, தமிழகத்தில் ஊத்துக்கோட்டை வழியே பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலேஸ்வரம், எ.என்.அணைக்கட்டு வழியே பழவேற்காடு அருகே புலிக்காட் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது. இதில் பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்ல ஆரணி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலையில், கிராம மக்கள் 10 கி.மீ., துாரம் சுற்றி பெரியபாளையம் சென்று செல்ல வேண்டும். கடந்தாண்டு புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆரணி ஆற்றில் மேம்பாலம் கட்ட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஆறு துாண்களுடன் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வர, புதிதாக மேம்பாலம் கட்டும் இடத்தின் அருகே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இதன் வழியே அப்பகுதி மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்காக சென்று வந்தனர். சில தினங்களாக ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலை, ஆற்றில் அதிகளவு நீர் பெருக்கெடுத்து வந்ததால், தற்காலிக தரைப்பாலம் சேதம் அடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. மேம்பாலம் கட்டும் பணி துவங்கி ஒரு ஆண்டு ஆன நிலையில் 50 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளது. கலெக்டர் நேரில் ஆய்வு செய்து புதுப்பாளையம் மேம்பால பணியை விரைவு படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.