டிராக்டரில் கட்டுமான பொருட்களுடன் ஆபத்தாக பயணிக்கும் தொழிலாளர்கள்
கும்மிடிப்பூண்டி, ஏப். 8-டிராக்டர்களில் கட்டுமான பொருட்களுடன், கூலி தொழிலாளர்களை ஆபத்தாக ஏற்றி செல்லும் முறையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி பகுதியில் கட்டுமான தொடர்பான தொழிலுக்கு தேவையான கூலி தொழிலாளர்களை டிராக்டர்களில் ஏற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பேருந்து, வேன், ஆட்டோ போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், ஆடு, மாடுகளை ஏற்றி செல்வதை போல் டிராக்டரின் டிரைலர்களில், கூலி தொழிலாளர்களை ஏற்றி செல்லும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும், வேதனை அளிக்கும் விதமாக, ‛ஹாலோ பிளாக்' செங்கல், சிமென்ட் மூட்டைகள், எம்.சாண்ட், சென்ட்ரிங் பலகைகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் டிராக்டர்களில், கூலி தொழிலாளர்களையும் அதே வாகனத்தில் அழைத்து செல்கின்றனர்.டிராக்டரின் டிரைலரில் ஏற்றி செல்லப்படும் தொழிலாளர்கள், கட்டுமான பொருட்கள் மீது எந்த பாதுகாப்பும் இன்றி ஆபத்தான முறையில் அமர்ந்தபடி செல்கின்றனர். விபரீதம் தெரியாமல் பயணிக்கும் கூலி தொழிலாளர்கள், பல சமயங்களில் விபத்தை சந்திக்க நேரிடுகிறது.எனவே, போலீசாரும், போக்குவரத்து துறையினரும் முறையாக கண்காணித்து, கூலி தொழிலாளர்களை டிராக்டர்களில் ஆபத்தாக ஏற்றி செல்லும் முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.