ரயில்வே சுரங்கப்பாதை மூடல்: 10 கி.மீ., சுற்றி செல்லும் அவலம்
திருத்தணி,திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள், 10 கி.மீ., துாரம் சுற்றி செல்கின்றனர். திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, தானியங்கி ரயில்வே கேட் செயல்பட்டு வருகிறது. இந்த கேட் வழியாக மேல்முருக்கம்பட்டு, மோட்டூர், சிங்கராஜபுரம், மங்காபுரம், மற்றும் பொன்பாடி ஆகிய இடங்களுக்கு வாகனங்கள் சென்று வந்தன. இந்த ரயில்வே கேட் வழியாக செல்லும் போது, வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன், தானியங்கி ரயில்வே கேட் மற்றும் 3.50 கோடி ரூபாய் மதிப்பில் சுரங்கப்பாதை அமைத்தது. மழை பெய்தால் சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்குவதால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். ரயில்வே நிர்வாகம் சார்பில், சுரங்கப்பாதைக்கு மழைநீர் செல்லாத வகையில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொன்பாடி கேட் வழியாக, 10 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதைக்கு மழைநீர் செல்லாத வகையில் கூரை அமைத்து, பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.