பராமரிப்பு இல்லாத கால்வாய் சாலையில் தேங்கும் மழைநீர்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்கள் துார்ந்துள்ளதால், சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில், 2020ல் மழைநீர் கால்வாய்கள் கட்டப்பட்டன. பஜாரில் இருந்து சோளிங்கர் மற்றும் பள்ளிப்பட்டு சாலையோரம் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால், மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஜாரில் உள்ள சாலையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் வகையில், நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் கால்வாய்கள் கட்டப்பட்டது. ஆனாலும், ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், தொடர் பராமரிப்பு மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, மழைக்காலத்தில் தண்ணீர் சாலையில் குளம்போல் தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பேருந்துக்காக காத்திருப்போரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு அரசு மேல்நிலை பள்ளிகள், ஒரு தொடக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு செல்வோரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.