மழைநீர் வடிகால்வாயில் பாரபட்சம்: மக்கள் கோரிக்கையால் மறுசீரமைப்பு
திருவள்ளூர்: நேதாஜி சாலையில் மழைநீர் வடிகால்வாய் பணி சீராக இல்லாததாக மக்கள் அளித்த புகாரையடுத்து, ஏற்கனவே அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தை உடைத்து, மறுசீரமைப்பு பணி துவங்கியுள்ளது. திருவள்ளூர் பஜார் வீதியில் இருந்து, திருத்தணி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், நேதாஜி சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, கடந்த நவ., மாதம் துவங்கியது. நெடுஞ்சாலை துறையினர், சாலையோரம் 4 அடி அகலம், 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி, கால்வாய் அமைத்து வருகின்றனர். இந்நிலையில், நேதாஜி சாலையின் நடுவே, மழைநீர் வடிகால்வாயை முறையாக அமைக்காமல், ஒரு பகுதியில் உயரமாகவும், அதனருகே உயரம் குறைவாகவும் கால்வாய் மீது கான்கிரீட் தளம் அமைத்தனர். இதனால், ஒரு சில வீடுகள், சாலை மட்டத்தை விட குறைந்து, மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டது. வடிகால்வாய் பணியை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் பிரதாப், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோரிடம், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கால்வாயை சீராக அமைத்து, அவற்றின் மேல் கான்கிரீட் தளத்தை சமதளமாக அமைக்குமாறு, நெடுஞ்சாலை துறையினருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி, தற்போது நெடுஞ்சாலை துறையினர், ஏற்கனவே அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தை இடித்து விட்டு, புதிய தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், ஒரு சில வீடுகளைச் சேர்ந்தோர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, நேதாஜி சாலையில் இடிக்காமல் உள்ள கான்கிரீட் தளம் முழுவதையும் அகற்றி விட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.