நெடுஞ்சாலை, இணைப்பு சாலையில் மழைநீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம், போக்குரவத்து பாதிப்பு
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விஜயநல்லுார் டோல்கேட் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. அவற்றில் வாகனங்கள் நீந்தியபடி பயணிக்கின்றன.மழைநீர் தேக்கத்தால் டோல்கேட்டின் நான்கு பாதைகள் மூடப்பட்டு, இரண்டில் மட்டும் வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வதால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதே தேசிய நெடுஞ்சாலையில் தேவனேரி பகுதியில் உள்ள இணைப்பு சாலை மற்றும் அங்குள்ள சுரங்பாதையில் மழைநீர் தேங்கி வெளியேற வழியின்றி கிடக்கிறது.வாகனங்கள் அதில் சென்று சிக்கி தவிக்கின்றன. மழைநீர் தேங்கி இருப்பது குறித்து அங்கு எந்தவொரு முன்எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் இணைப்பு சாலை பயணித்து, மழைநீரில் சிக்கி வாகனங்கள் பழுதடைவதால், அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.கவரைப்பேட்டை பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் ஆந்திரா மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கவரைப்பேட்டை பஜார் பகுதி வழியாக இணைப்பு சாலையில் சென்று வருகின்றன.கும்மிடிப்பூண்டி பகுதியில் பெய்தி வரும் தொடர் மழையால், கவரைப்பேட்டை சாலையில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கி நின்றன. இதனால், கவரைப்பேட்டை பஜார் சாலை முழுதும் மழைநீரில் தத்தளித்தது. மழைநீர் தேங்கியதால் சாலை பழுதாகி பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டன. வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றதால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. கீழ்முதலம்பேடு ஊராட்சி நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இணைந்து தேங்கிய மழைநீரை வெளியேற்றினர். கவரைப்பேட்டை போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில், எளாவூர், தச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் குளம் போல் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வாகனங்கள் கடக்க முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்து துாறல் மழையும், அவ்வப்பபோது, பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். திருத்தணி ஒன்றியம் அலுமேலுமங்காபுரம் ஊராட்சி, வள்ளூவர்பேட்டை காலனி பகுதிக்கு செல்லும் ஒன்றிய சாலை முழுதும் சேதம் அடைந்து ஜல்லிகற்கள் தெரிகிறது. மேலும், சாலையில் மழைநீர் தேங்கியும் சாலை இருபுறமும் செடிகள் வளர்ந்துள்ளதால் இரு சக்கர வாகன ஒட்டிகள் மற்றும் மக்கள் நடந்து செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். திருத்தணி ஒன்றியத்தில் உள்ள, 27 ஊராட்சிகளில் நேற்று முன்தினம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பொதுமக்கள் வேலை செய்வதற்கு ஒன்றிய நிர்வாகம் அனுமதி வழங்கியதால் நுாறுநாள் வேலைக்கு வந்த பெண்கள் மழையில் குடை பிடித்தப்படி, குளிரில் நடுங்கியவாறு வேலை செய்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், பூ பயிரிட்ட விவசாயிகள் கொட்டும் மழையிலும், குடைகள் பிடித்தும், ரெயின் கோட் அணிந்தும் செடிகளில் பூக்களை பறித்து திருத்தணி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். கடந்த இரு நாட்களாக மின்னல், இடியுடன் பெய்த மழையால் மாம்பாக்கம், சத்திரஞ்ஜெயபுரம், மற்றும் பட்டாபிராமபுரம் ஆகிய கிராமங்களில் வயல்வெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற மூன்று பசுமாடுகள் மின்னல் தாக்கி இறந்துள்ளன.ஊத்துக்கோட்டை, சூளைமேனி, பெரியபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.தொடர் மழை காரணமாக சூளைமேனி பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலைகள், தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பாலவாக்கம், தண்டலம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.- நமது நிருபர் குழு-