சோழவரம்: சோழவரம் ஏரியில் இருந்து, புழல் ஏரி மற்றும் கொசஸ்தலை ஆற்றிற்கு, விநாடிக்கு 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது, 250 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. வடகிழக்கு பருவமழை காரணமாக, ஏரிக்கு எதிர்பார்த்த தண்ணீர் வந்ததால் வேகமாக நிரம்பியது. கடந்த 10ம் தேதி நிலவரப்படி, ஏரியில், 0.79 டி.எம்.சி., தண்ணீர் தேங்கிருந்தது. அதேசமயம், புதுப்பிக்கப்பட்ட கரைகள் உள்வாங்கி சேதமானதால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரை குறைப்பதற்காக, கடந்த 11ம் தேதி முதல் விநாடிக்கு, 250 கன அடி தண்ணீர், புழல் ஏரிக்கு வெளியேற்றப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடப்பட்ட கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, கடந்த 15ம் தேதியில் இருந்து, ஏரியின் கலங்கல் பகுதியில் உள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றிற்கு வெளியேற்றப்பட்டது. புழல் ஏரி மற்றும் கொசஸ்தலை ஆறு என, விநாடிக்கு, 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், சோழவரம் ஏரியில் இருந்து, கொசஸ்தலை ஆற்றிற்கு செல்லும் கால்வாய் பராமரிப்பு இல்லாத நிலையில், அருகில் உள்ள விவசாய நிலங்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால், விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகினர். கனமழைக்கான வாய்ப்பு இல்லாத நிலையிலும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தொடர்ந்து, ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றிற்கு தண்ணீர் வெளியேற்றுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டது. தற்போது, ஏரியில் இருந்து, புழல் ஏரிக்கு மட்டும், 250 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏரியின் கொள்ளளவு வேகமாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஏரியில் 0.57 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது.