ராதாகிருஷ்ணனுக்கு மணிமண்டபம் அமைக்க வெங்கடபுரத்தில் கோரிக்கை
திருத்தணி:இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும், கல்வி மேதையாகவும் விளங்கியவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவர் திருத்தணி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்தார். இவர் பிறந்த நாளான, செப்.5 ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் மறைந்த, ஏப்.17ம் தேதி அவரது நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனின் 50வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி, அவர் பிறந்த கிராமமான வெங்கடாபுரத்தில் நேற்று அவர் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் துாவியும் பொதுமக்கள் நினைவு அஞ்சலி செலுத்தினர்.டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த ஊரான வெங்கடாபுரத்தில், அவருக்கு மணிமண்டபம் கட்டி அவரது சிலை அமைப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை வைத்தனர்.