கச்சூர் பிரிவில் பேருந்து நிறுத்தம் முதல்வர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை
திருவள்ளூர்:திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலை, கச்சூர் பிரிவில் பேருந்து நிறுத்தம் கோரி, கிராமவாசிகள் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளனர்.ஊத்துக்கோட்டை வட்டம் கச்சூர் கிராமமக்கள் சார்பில் ரமணய்யா என்பவர், முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில், கச்சூர் பிரிவு அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மலைவாழ் இருளர் இனத்தினர், மற்றும் பார்வையற்றோர் பலர் வசித்து வருகின்றனர். மேலும், அருகில் உள்ள கிராமங்களில் இருந்து, பலரும் கச்சூருக்கு பேருந்துகளில் பயணிக்க வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு பெரும்பாலான பேருந்துகள் நிற்பதில்லை. குறிப்பாக, பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளும் இங்கு நின்று செல்வதில்லை. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திற்கும், போக்குவரத்து துறைக்கும் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சீத்தஞ்சேரி-கச்சூர் இடையில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.அரசு சிறப்பு செயலர் லில்லி அளித்துள்ள பதில் மனுவில், 'புகார் மனு குறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்.