கும்மிடி துணை மின் நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், துணை மின் நிலையம் உள்ளது. அங்கிருந்து, கும்மிடிப்பூண்டி நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.துணை மின் நிலையத்தை ஒட்டி ஓடை செல்கிறது. மழைக்காலங்களில், இந்த ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும் போது, துணை மின் நிலையத்தில் மழை வெள்ளம் சூழந்து விடும். இந்த மழை வெள்ளம் வடியும் வரை, மின் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.துணை மின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலன் கருதி ஓடைக்கும், துணை மின் நிலையத்திற்கு இடையே தடுப்பு ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.தற்போது கோடைக்காலம் என்பதால், அடுத்து வரும் மழைக்காலத்திற்குள் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.