உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க எல்லையில் கண்காணிக்க கோரிக்கை

ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க எல்லையில் கண்காணிக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:தமிழக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, எளாவூர் சோதனைச்சாவடியில், 24 மணி நேரமும் போலீசார் வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. சிறிய அளவில் கடத்துவோர், புறநகர் மின்சார ரயில்களிலும், டன் கணக்கில் கடத்துவோர், சாலை மார்க்கமாகவும் கடத்தி செல்கின்றனர். சாலை மார்க்கமாக கடத்துவோர், பெரும்பாலும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் கடத்தி செல்கின்றனர். அரிசி கடத்தலுக்கு சரக்கு ஆட்டோ, மினி லாரியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் கிடைத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வாகனத்தை போலீசார் பிடித்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். கடத்தல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போதும், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்வதை தடுக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள, தமிழக ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இதனால், தமிழகத்தில் இருந்து எளாவூர் சோதனைச்சாவடி வழியாக தினமும் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் திசையில் உள்ள சோதனைச்சாவடியில், குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், 24 மணி நேரமும் கண்காணித்து, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை