நெல் கொள்முதல் நிலையம் விரைந்து திறக்க கோரிக்கை
திருவாலங்காடு, வீரராகவபுரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னமண்டலி, பாகசாலை, வீரராகவபுரம், களாம்பாக்கம் உள்ளிட்ட எட்டு ஊராட்சிகளில், அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டுள்ளது. பாகசாலை, களாம்பாக்கம், கூளூர் உள்ளிட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வீரராகவபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் இதுவரை செயல்படவில்லை. இதனால், திருவாலங்காடு, பழையனுார், மணவூர் சுற்றுவட்டார பகுதியில், 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது, அறுவடை துவங்கியுள்ள நிலையில், வீரராகவபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் தற்போது வரை திறக்கப்படாததால், தனியாரிடம் நெல்லை விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர். எனவே, வீரராகவபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.