தெரு பெயர் பலகைகளை புதுப்பிக்க கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளில், நுாற்றுக்கணக்கான தெருக்கள் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன், தெரு முனைகளில் ‛ஸ்டெயின்லஸ் ஸ்டீல்' தெரு பலகைககள் வைக்கப்பட்டன.தற்போது பெரும்பாலான பலகைகள் சேதமடைந்தும், பெயர்கள் இன்றியும் காட்சியளிக்கின்றன. அந்த தெரு பலகைகளும், விளம்பர பலகையாக மாற்றப்பட்டன.இதனால், தெருக்களின் பெயர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதில் ஒட்டப்படும் விளம்பர சுவெராட்டி மற்றும் ஸ்டிக்கர்களால் நகர் பகுதி பொலிவு இழந்து காணப்படுகிறது.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த பெயர் பலகைகளை புதுப்பித்து, தெரு பெயர்களை குறிப்பிட வேண்டும். அதை அசுத்தம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.