தண்ணீர் நிரம்பாத குளம் சீரமைக்க வேண்டுகோள்
திருவாலங்காடு: மணவூரில் மழை பெய்தாலும் நிரம்பாத ஊரணி குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சியில் திருத்தீஸ்வரர் கோவில் எதிரே அமைந்துள்ளது ஊரணி குடிநீர் குளம். 700 ஆண்டுகள் பழமையான இந்த குளம் மணவூர் சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்ததோடு, நிலத்தடி நீர் மட்டத்தை சீராக வைத்திருக்க காரணமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குளத்திற்கு வந்த பெரிய ஏரி நீர்வரத்து கால்வாய் அடைக்கப்பட்டது. மேலும் படிகள் உடைந்ததால் குளத்து நீரை மக்கள் பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தனர். பயன்பாடு குறைந்ததால் குளத்தில் செடிகள் முளைத்தும் கழிவு பொருட்களை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது. பழமை வாய்ந்த ஊரணி குடிநீர் குளம் பாழடைந்து வருவதை தடுத்து, இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் சீராக இருக்க இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.