செடிகள் வளர்ந்து மாயமான தெருச்சாலை 20 ஆண்டாக தவிக்கும் குடியிருப்புவாசிகள்
சோழவரம்:சோழவரம் பி.டி.ஓ., அலுவலகம் அருகே உள்ள பெருமாள் கோவில் பின்புறம் உள்ள பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பெருமாள் கோவில் குறுக்கு தெருவை, குடியிருப்புவாசிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு செடி, கொடிகள் வளர்ந்து ஒற்றையடி பாதையாக மாறியுள்ளது.இந்த தெருச்சாலையை சீரமைக்க வேண்டும் என, 20 ஆண்டுகளாக சோழவரம் ஊராட்சி கிராம சபை கூட்டங்களிலும், சோழவரம் ஒன்றிய அதிகாரிகளிடமும் குடியிருப்பு வாசிகள் மனு அளித்து வருகின்றனர். இதுவரை இந்த தெரு சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால், அப்பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:நாங்கள் வசிக்கும் பகுதியில் மற்ற தெருச்சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. எங்கள் தெரு மட்டும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இந்த தெரு வழியாக ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை வருவதற்கு வாய்ப்பின்றி சிரமப்படுகிறோம்.வயதானவர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். வாகனங்களை அடுத்த தெருவில் நிறுத்துவிட்டு தான் வீட்டிற்கு வந்து செல்லும் நிலை உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தெருச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.