ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர் : திருவேற்காடு கோலடி ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பகுதிவாசிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருவேற்காடு கோலடி ஏரி பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. இந்நிலையில், நீர்நிலை புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டதாக, கடந்த இருதினங்களுக்கு முன் பொதுப்பணி துறையினர், புதிதாக கட்டப்பட்ட 200க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றினர்.இந்நிலையில், கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் தங்களது வீடுகளை இடிக்க கூடாது என கோரி, மாணவ - மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் என, 300க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். கணக்கெடுப்பு துவக்கம்
திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள கோலடி ஏரி ஆக்கிரமிப்பு குறித்த ஆய்வில், கோலடி அன்பு நகர், செந்தமிழ் நகர் பகுதிகளில் 33 வீடுகள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து, கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் 75 பேர், ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் இரு நாட்களுக்கு முன் அங்கு சென்றனர். அப்போது, செந்தமிழ்நகர், அன்புநகர் பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதில், 'புதிய வீடுகள் மட்டுமே தற்போது அகற்றப்படும். மற்ற ஆக்கிரமிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு, முறையாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, பின்னர் அகற்றப்படும்' என தெரிவித்தனர்.இதையடுத்து, மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து கடந்த இரு நாட்களாக 26 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.இந்நிலையில், 169 ஏக்கர் பரப்பு உடைய கோலடி ஏரியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக வருவாய் துறை ஆய்வில் தெரிய வந்துஉள்ளது. இதையடுத்து, ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை மீண்டும் கணக்கெடுக்கும் பணியை, வருவாய்த்துறையினர் நேற்று துவங்கி உள்ளனர். பாதுகாப்பு
குழுவிற்கு ஐந்து பேர் வீதம், 10 குழுக்களாக பிரிந்து, 50 பேர் குழுவினர், உரிய அனுமதி, ஆவணங்கள் இல்லாமல் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அளவீடு செய்து, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.'மூன்று நாட்களில் கணக்கெடுப்பு பணி முடிந்து விடும், அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.