ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
திருத்தணி:தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கூட்டுறவு பொதுத் துறை சர்க்கரை ஆலைகள் கோரிக்கை மாநாடு, மாநில பொருளாளர் பெருமாள் தலைமையில், திருத்தணியில் நேற்று நடந்தது.இதில், பொது செயலர் ரவீந்திரன், மாநில தலைவர் வேல்மாறன், எம்.எல்.ஏ., நாகைமாலி ஆகியோர் பங்கேற்று, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.தொடர்ந்து மாநாட்டில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை புதுப்பித்து மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளை மேம்படுத்த 2,000 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்.திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அக்டோபர் மாதம் அரவையை துவங்க வேண்டும். மத்திய அரசு கரும்பு டன்னுக்கு 5,500 ரூபாய் வழங்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தது போல, டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சாமி நடராஜன், மாநில செயலர் துளசி நாராயணன், மாவட்ட செயலர் சம்பத் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.