ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய் துறை: 3 மாதமாக சாலையில் ஓடும் கழிவுநீர் திருவாலங்காடு மக்கள் குற்றச்சாட்டு
திருவாலங்காடு: திருவாலங்காடில் மூன்று மாதங்களாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாமல் காலம் தாழ்த்தும் திருத்தணி வருவாய் துறையினரே காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது அம்பேத்கர் நகர். இப்பகுதியில் சர்ச் தெரு, அம்மன் கோவில் தெரு உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மூன்று மாதங்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இங்குள்ள கால்வாய் பெரும்பாலும், 8 - 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது, அவை உள்வாங்கி, மண் சேர்ந்து கழிவுநீர் சாலையில் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரால் பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கடந்த ஜூலை மாதம், தொடர்ந்து வந்த புகாரையடுத்து, ஆகஸ்ட் மாதம் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் பார்வையிட்டு, கால்வாய் அமைக்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், அங்குள்ள பழைய கால்வாயை இடித்து, புதிதாக கால்வாய் அமைக்க தீர்மானித்தனர். இதையடுத்து, திருத்தணி சர்வேயரால் கால்வாய் அளவீடு செய்யப்பட்டது. அதில், இரண்டு சர்வே எண்ணில், 18 பேர் கால்வாயை ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்தது. பின், வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், கால்வாய் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாகவும், அப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யாமல் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகள் மீது, கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.