பொன்னேரியில் வீணாகும் வருவாய் துறை வாகனங்கள்
பொன்னேரி, பொன்னேரியில் செயல்திறன் இழந்த வருவாய்த் துறை வாகனங்கள் ஓரங்கட்டப்பட்ட நிலையில், அவை துருப்பிடித்து வீணாகி வருவது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொன்னேரி வருவாய்த் துறை அலுவலகத்தில் பணியாற்றும் உயரதிகாரிகளுக்கு, பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக வாகனம் வழங்கப்படுகிறது. இவை, குறிப்பிட்ட காலத்திற்கு பின், அவற்றின் செயல்திறன் குறையும் போது, பயன்படுத்தப்படாமல் ஓரம் கட்டப்படுகின்றன. அதிகாரிகளுக்கு புதிய வாகனம் வழங்கப்படும் நிலையில், பழைய வாகனங்கள் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன. இவற்றை உரிய நேரத்தில் ஏலம் விட்டால், அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: குறிப்பிட்ட கி.மீ., பயணம் செய்த வாகனங்கள் செயல்திறன் குறையும் போது, அடிக்கடி பழுதாகின்றன. இதையடுத்து, அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் கொடுக்கும்போது, இவை ஓரம் கட்டப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக அவற்றை ஏலம்விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏலம் எடுப்போர், வாகனங்களின் நிலைக்கு ஏற்ப, பழுது நீக்கி சிறிது காலம் பயன்படுத்துவர் அல்லது அதிலுள்ள உதிரிபாகங்களை வேறு வாகனங்களுக்கு பயன்படுத்தி கொள்வர். நீண்டகாலமாக ஓரங்கட்டப்பட்டு, வாகனங்களின் உதிரிபாகங்களும் துருப்பிடித்து செயலிழக்கும் நிலையில், ஏலம் எடுக்க யாரும் முன்வரமாட்டார்கள். இதனால், அரசுக்கு இழப்பு தான் ஏற்படும். எனவே, மாவட்ட முழுதும் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் ஓரங்கட்டப்பட்ட வாகனங்களை ஏலம் முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.