திருத்தணி முருகன் கோவிலில் ஆற்று உற்சவம்
திருத்தணி,:திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஆற்று உற்சவ திருவிழா, திருத்தணி முருகன் திருவடி சபை குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஆற்று உற்சவ திருவிழா நேற்று நடந்தது.இதையொட்டி, உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன், நேற்று காலை 10:00 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக, மேல்திருத்தணி நல்லாங்குளம் பகுதிக்கு சுமைதாரர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.பின், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், பொதட்டூர்பேட்டை ரோடு, தெக்களூர் பகுதியில் உள்ள நந்தி ஆற்றங்கரை கோவில் தோட்ட மண்டபத்தில், மதியம் 2:00 மணிக்கு எழுந்தருளினார். மாலை 6:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதை தொடர்ந்து, நந்தியாற்றில் உள்ள நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் மலைக்கோவிலுக்கு வந்தடைந்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.