பொன்னேரி: ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தருவதாக கூறி, பெண்ணிடம், 35,000 ரூபாயை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். பொன்னேரி அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி ஜோதி, 62. இவர், கடந்த 17ல், வங்கி கடன் பெறுவதற்காக, பொன்னேரி இந்தியன் வங்கிக்கு சென்றார். கடன் தொகை, வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஜோதி, பணத்தை எடுக்க வங்கியின் நுழைவாயிலில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றார். தன் ஏ.டி.எம்., கார்டை ப யன்படுத்தி பணம் எடுக்க முயன்றார். ஆனால், பணம் வரவில்லை. பின்னால் நின்றிருந்த வாலிபரிடம், ஏ.டி.எம்., கார்டின் ரகசிய எண்ணை தெரிவித்து, பணம் எடுத்து தரும்படி கேட்டார். அந்த வாலிபர் அட்டையை இயந்திரத்தில் செலுத்திவிட்டு, 'வங்கி கணக்கில் பணம் வரவில்லை; உள்ளே சென்று அதிகாரிகளிடம் கேளுங்கள்' எனக்கூறி, ஏ.டி.எம்., கார்டை கொடுத்தார். வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் விசாரித்த ஜோதி, தன்னிடம் இருந்த ஏ.டி.எம்., கார்டை காண்பித்தார். அதிகாரிகள், 'இது உங்களுடைய கார்டு இல்லை' என தெரிவித்ததுடன், ஜோதியின் கணக்கை சரிபார்த்தபோது, நான்கு முறை, 35,000 பணம் எடுக்கப்பட்டது தெரிந்தது. ஏ.டி.எம்.,மில் உதவுவது போல் நடித்த வாலிபர், போலியான அட்டையை கொடுத்துவிட்டு, ஜோதியின் அட்டையில் இருந்து பணத்தை திருடியது தெரிந்தது. இதுகுறித்து ஜோதி, பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, திருட்டில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.